Skip to content
Home » பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை…

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரி திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு பூதலூர் சாலையில் பிணவறை (பிரேத பரிசோதனை கூடம்) ஒன்று அமைந்துள்ளது. திருக்காட்டுப்பள்ளி, தோகூர், பூதலூர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்த பிணவறையில் பிரேத பரிசோதனை நடைபெறும்.

75 ஆண்டுகளுக்கு மேலாக பிணவறையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வந்தது. இந்த பிரேத பரிசோதனை கூடம் உபயோகத்துக்கு லாயக்கில்லை என்று பொதுப்பணித்துறை கட்டிட பிரிவு சான்றிதழ் அளித்ததன் அடிப்படையில் கடந்த 2021-ம் ஆண்டு இந்த கட்டிடம் பயன்படாத நிலைக்கு தள்ளப்பட்டது. அன்று முதல் இந்த பகுதியில் நடைபெறும் விபத்து மற்றும் நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அல்லது பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பிணவறையை சீரமைத்து புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை எழுப்பினர்.

கடந்த ஆண்டு சட்டசபையில் திருக்காட்டுப்பள்ளியில் பிரேத பரிசோதனை கூடம் இந்த ஆண்டே கட்டித் தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. உறுதி அளிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் தற்போதுவரை நிதி ஒதுக்கப்படாமல் புதிய பிணவறை கட்டுவதற்கான அறிகுறியே காணாமல் உள்ளது.

இதனால் திருக்காட்டுப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் விபத்து உயிரிழப்புகளில் உடல்களை பூதலூரில் உள்ள குளிர் சாதனவசதியும் இல்லாத பிணவறைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கல்லணை திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் சுற்றுலாத்தலமான கல்லணை உள்ளது. கல்லணையில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கல்லணையிலிருந்து அருகில் உள்ள திருக்காட்டுப்பள்ளிக்கு உடலை கொண்டு வருவதை விட 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூதலூருக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அதிக அலைச்சலும் பொருட்செலவும் ஏற்படுகிறது. எனவே சட்டசபையில் அறிவித்தபடி உடனடியாக திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு புதிதாக அனைத்து வசதிகளுடனும் கூடிய பிரேத பரிசோதனை கூடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!