Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவள்ளூர் ATM கொள்ளை வழக்கு- மேற்கு வங்கத்தில் 3 பேர் கைது!

திருவள்ளூர் ATM கொள்ளை வழக்கு- மேற்கு வங்கத்தில் 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்த வழக்கில், மூன்று பேரை தமிழ்நாடு போலீசார் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள், கூடப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து எடுத்துச் சென்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

இதனிடையே, ஏடிஎம் இயந்திரம் எடுத்துச் செல்லப்பட்ட மறுநாளான 6ஆம் தேதி, சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் ஏடிஎம் இயந்திரத்தின் பாகங்கள் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை வெள்ளவேடு போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதிவாகியிருந்த 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மேற்கு வங்காளத்தில் இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையர் தலைமையில் மூன்று தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று, கடந்த இரண்டு வாரங்களாக குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று பேரை மேற்கு வங்காளத்தில் வைத்து தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து, வெள்ளவேடு காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்ளை கும்பல் வேறு பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் கடந்த 25ஆம் தேதி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும், கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றிருந்தன.

இந்த சம்பவங்களிலும் இதே கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு அமரர் ஊர்தி பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த அமரர் ஊர்தியை போலீசார் கடந்த வாரமே பறிமுதல் செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் ஆவடி காவல் ஆணையர் மற்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!