“அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்கமே திராவிட இயக்கம்” என்று புகழாரம் சூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 10 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
மாணவர்களிடையே புது ‘வைப்’ (Vibe): விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய முதல்வர், “புத்தாண்டை புத்துணர்வுமிக்க மாணவர்களிடையே தொடங்குவது எனக்குள் ஒரு ‘பாசிட்டிவ் எனர்ஜியை’ (Positive Energy) அளிக்கிறது. உங்களைப் பார்த்தவுடன் எனக்குள்ளும் ஒரு புது ‘வைப்’ வந்துவிட்டது. ‘உலகம் உங்கள் கையில்’ என்பது வெறும் தலைப்பு மட்டுமல்ல, அதுதான் நிதர்சனமான உண்மை. மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் இந்த மாநிலம் வளரும் என்ற நோக்கில் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்,” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இரண்டாவது நெருப்பு – ஏ.ஐ (AI): நவீன தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (AI) குறித்துப் பேசிய முதல்வர், “மனித குலத்திற்கு காலம் கொடுத்துள்ள இரண்டாவது நெருப்புதான் ஏ.ஐ. நெருப்பைக் கண்டறிந்தபோது மனித இனம் எப்படி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததோ, அதேபோல் ஏ.ஐ தொழில்நுட்பமும் நம்மை உயர்த்தும். ஆனால், செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது; அது மனிதர்களுக்கு உதவியாக மட்டுமே இருக்கும்,” என்று தெளிவுபடுத்தினார்.
கல்விக்கான முதலீடு: இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில், “மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதை அரசு ஒரு செலவுத் திட்டமாகக் கருதவில்லை. இது நமது எதிர்காலத் தலைமுறையின் கல்விக்காகச் செய்யப்படும் மிகச்சிறந்த முதலீடு. ஒட்டுமொத்த உலகத்தையும் உங்கள் கைகளில் கொடுக்கவே இந்த மடிக்கணினிகளை வழங்கியுள்ளோம். இதைப் பயன்படுத்தி நீங்கள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், அதில் உச்சத்தில் இருக்க வேண்டும்,” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
போலி பெருமைகளைத் தவிர்ப்போம்: “தமிழர்களான நாம் நமது கடந்தகாலப் பெருமைகளைப் பேசுவதோடு மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலப் பெருமைகளுக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும். ஒருபோதும் போலிப் பெருமைகளைத் திராவிட மாடல் ஆட்சி பேசாது. அனைவரையும் வாழ வைக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். லேப்டாப்பை கேம்ஸ் (Games) விளையாடப் பயன்படுத்தப் போகிறீர்களா அல்லது எதிர்காலத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்,” என மாணவர்களுக்கு முதல்வர் ஊக்கமளித்தார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

