Skip to content
Home » திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

திரிபுரா முதல்வர் தேர்வில் சிக்கல்…. பா.ஜ. மேலிட தலைவர் விரைந்தார்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், 60 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்ற 2-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. 32 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. பா.ஜ.க.வின் கூட்டணிக்கட்சியான ஐ.பி.எப்.டி. கட்சியும் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அங்கு முதல்-மந்திரியாக மீண்டும் மாணிக் சகாதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இதில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது.

புதிய முதல்-மந்திரி பதவிக்கு இப்போது 2 பேர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. ஒருவர் மாணிக் சகா. அங்கு முதல்-மந்திரியாக இருந்து வந்த பிப்லாப் தேப்பை மாற்றி விட்டு கடந்த ஆண்டு மார்ச் 14-ந் தேதிதான் மாணிக் சகா, முதல்-மந்திரி பதவிக்கு வந்தார். அவரது தலைமையில்தான் கட்சி, சட்டசபை தேர்தலை சந்தித்து கடிமான தருணத்திலும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

மேலும், இவர் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவராக பார்க்கப்படுகிறார். முதல்-மந்திரி பதவிக்கு அடிபடுகிற மற்றொரு பெயர், மத்திய பெண் மந்திரி பிரதிமா பவுமிக் . மாணிக் சகாவை ஒரு தரப்பினர் ஆதரிக்கிறார்கள். முன்னாள் முதல்-மந்திரி பிப்லாப் தேப் ஆதரவாளர்கள் உள்ளிட்ட மற்றொரு பிரிவினர், பிரதிமா பவுமிக் முதல்-மந்திரியாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இவ்விருவர்களில் ஒருவர்தான் புதிய முதல்-மந்திரி என கூறப்படுகிறது.

புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா 8-ந் தேதி நடப்பதாகவும், இந்த விழாவில் பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் புதிய முதல்-மந்திரியைத் தேர்வு செய்வதற்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்னும் நடத்தப்படவில்லை. இந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் என பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி தேர்வில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு அதில் நிபுணத்துவம் வாய்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மாவை கட்சி மேலிடம் திரிபுரா அனுப்பி வைத்துள்ளது. அவர் எம்.எல்.ஏ.க்களிடம் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது. கட்சி மேலிடம், மாணிக் சகாவுக்கு ஆதரவாக இருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. கடினமான தருணத்தில் கட்சியை வெற்றி பெற வைத்திருப்பதால் மாணிக் சகாவையே மீண்டும் முதல்-மந்திரி ஆக்கிவிட்டு, மத்திய பெண் மந்திரி பிரதிமா பவுமிக்கை துணை முதல்-மந்திரியாக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளதாக அகர்தலாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இன்று அல்லது நாளை இதில் முடிவு எட்டப்பட்டு விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!