Skip to content
Home » பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்…. அரியலூர் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்  அரியலூரில் நடைபெற்றது.கூட்டத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் பேசியதாவது:

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றிப்பெற திமுக காட்டும் வழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயணிக்க வேண்டும். அனைத்து பொறுப்பாளர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து  தீவிர தேர்தல் பணியாற்ற வேண்டும். பணி வழங்கப்பட்ட இடங்களில் பணி செய்ய வேண்டும். எதிரணியினர் மீது கோபம் கொள்ள வேண்டாம். அவர்கள் நம்மை கோபப்படுத்தி நமது வழியை மாற்றியமைக்க திட்டமிடுவர்.

இணையத்தில் பல்வேறு கருத்துக்களை பரப்பலாம். அவற்றை யாரும் கண்டுக்கொள்ள வேண்டாம். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக. ஆனால் நாம் தற்போது எதிர்க்க வேண்டியது பாஜக அணி. இந்த தேர்தலில் அதிமுகவை பொருட்டாக கருத வேண்டாம். இந்தியாவை பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இந்தியாவை பாதுகாக்க பாஜகவை வீழ்த்த வேண்டும்.

தமிழகம் போல கர்நாடகம், ஆந்திரா, கேரளா, பஞ்சாப், டெல்லி என பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக இந்த அணி உள்ளது. இவ்வாறு பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது பாஜக நிச்சயம் வீட்டுக்கு சென்றுவிடும். பாஜகவை வீட்டுக்கு அனுப்ப முதல் வியூகத்தை அமைத்தவர் மு.க.ஸ்டாலின். இதனாலேயே திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொடர்ந்து பயணிக்கிறது.
2009-ம் ஆண்டு கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு, தம்பி திருமாவளவன் எப்போதும் எங்கள் கொள்கையை மதிப்பதால், அக்கட்சி எங்களுடனே பயணிக்கும் என்றார். அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. 2 முறை சில சூழ்நிலை காரணமாக திமுக கூட்டணியில் இடம் பெற முடியாமல் போனது. காவிரி நீருக்காக அமைக்கப்பட்ட இந்த கூட்டணி இன்றும் தொடர்கிறது.
இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணம் திமுக, காங்கிரஸ் கூட்டணி என பேசப்பட்டது. அதனை முறியடித்து திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. இந்த நாட்டுக்கு ஒரு தீங்கு ஏற்பட இருக்கிறது. அதனை தடுக்க நமக்குள் இருக்கும் பிரச்சினைகளை புறம்தள்ளிவிட்டு, நாட்டுக்கு வரும் தீங்கை தடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஜெயலலிதா இல்லை எனவே அதிமுவை அழித்து விடலாம். கருணாநிதி இல்லை திமுகவை அழித்து விடலாம் என பாஜக நினைக்கிறது. அது ஒருபோதும் இங்கு முடியாது. இங்கு கருணாநிதி மகன் ஸ்டாலின் இருக்கிறார். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சி இருக்காது.
நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன். மக்களவையில் மக்களுக்காக குரல் கொடுக்க பானை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றிப்பெற செய்யுங்கள் என்றார்.

கூட்டத்தில், எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர், திமுக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ராமநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உட்பட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!