Skip to content
Home » மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

மத்திய அரசிடம்…….வெள்ள நிவாரணம் கேட்டு வழக்கு தொடர முடிவு…. முதல்வர் ஸ்டாலின் அரசு

நெல்லை  மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு, நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமராவது உங்கள் கைகளில்தான் உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாகிவிடும். தேர்தல் வந்ததால் தமிழகத்துக்கு பிரதமர் அடிக்கடி வருகிறார். வெள்ளம் வந்தபோது எங்கே இருந்தீர்கள்?. தமிழகத்தைஇயற்கை பேரிடர் தாக்கியபோது, ஒரு பைசா கொடுத்தீர்களா? மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தீர்களா?

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 37 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்டோம். உரிமையோடு நாம் கேட்கும் தொகையை தராமல் உள்ளனர். எனவே, தமிழகத்துக்கான வெள்ள நிவாரண நிதியை வழங்க கேட்டு மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளோம். நிதியையும் தராமல், மக்களை ஏளனமாகவும் பேசுகிறார்கள். தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்கிறார் ஒரு மத்திய அமைச்சர். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார்.

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம். எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம். தமிழகத்துக்கு பாஜக அரசு கொண்டுவந்த சிறப்பு திட்டங்கள் என்ன? கடந்த 10 ஆண்டுகளாக என்ன சாதித்தீர்கள்? மத்தியில் ஆட்சியில் திமுக பங்கேற்றபோது, தமிழகத்துக்கு பல சிறப்பு திட்டங்களை கொண்டுவந்தோம்.

மத்திய அரசு நிதியில் 18 சதவீதத்தை தமிழகத்துக்கு கொண்டுவந்தோம். தமிழை செம்மொழியாக்கினோம். செம்மொழி தமிழாய்வு மையத்தை சென்னையில் அமைத்தோம். பிரதமர் மோடியின் அளவுக்கு தமிழகத்தை வஞ்சித்த, வெறுத்த பிரதமர் வேறுயாரும் இருக்க முடியாது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை வேடிக்கை பார்த்தது நீங்கள்தான். மீனவர்கள் தாக்குதலை தடுக்க முடிவில்லையே. இலங்கையைப் பார்த்து பயப்படுகிறீர்களா?

நாடு இப்பேர்ப்பட்ட பேராபத்தில் சிக்கித் தவிக்கிறது. இதைப்பற்றி கவலையில்லாமல் பழனிசாமி நடமாடுகிறார். பாஜக ஆட்சியின் அவலங்களை அவர் கண்டித்து பேசுவதில்லை. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்காகவே அதிமுகவும், பாஜகவும் கள்ளக்கூட்டணி வைத்துள்ளன. பழனிசாமி தமிழக மக்களிடம் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடமும் செல்வாக்கு இழந்துவிட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர்கள்மனோதங்கராஜ், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு,  மற்றும் காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  மாவட்டதிமுக  செயலர்கள் மகேஷ், ஆவுடையப்பன், டிபிஎம் மைதீன்கான், ஜெயபாலன், ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், ராஜேஷ், பிரின்ஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!