Skip to content
Home » ஒரே நாளில் லட்சாதிபதியாக்கிய தக்காளி… திருப்பூர் விவசாயி மகிழ்ச்சி

ஒரே நாளில் லட்சாதிபதியாக்கிய தக்காளி… திருப்பூர் விவசாயி மகிழ்ச்சி

நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர வர்க்கத்தினர் பலர் சமையலில் தக்காளியை தவிர்த்து உள்ளனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே தக்காளி பயிர் செய்த விவசாயிகள் பலர் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி உள்ளனர் என்ற செய்திகளும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தக்காளியை பயிர் செய்த விவசாயி ஒருவர் ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளியை விற்பனை செய்துள்ளார். திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஜோதியம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடேஷ் (27) தான் விளைவித்த தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். 3900 கிலோ தக்காளியை 260 பெட்டிகளில், பெட்டிக்கு 15 கிலோ வீதம் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். ஒரு பெட்டி ரூ.1550 முதல் விற்பனையானது. தக்காளியை விற்பனைக்கு கொண்டு வந்த நேரத்திலேயே மளமளவென விற்று தீர தொடங்கியது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 160 வரை விற்பனையானது. இதன் மூலம் விவசாயி வெங்கடேசுக்கு ஒரே நாளில் ரூ. 4 லட்சத்து 3 ஆயிரத்திற்கு தக்காளி விற்பனையானது.

திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை ஒரே நாளில் லட்சக்கணக்கில் நடந்தது, பல விவசாயிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:- ஜோதியம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தக்காளி விவசாயம் செய்து வருகிறேன். தக்காளியை நம்பியே அதிக அளவு பயிர் செய்து வந்தேன். தற்போது 9 ஏக்கர் அளவிற்கு தக்காளி பயிரிட்டுள்ளேன். இந்த தக்காளிகளும் விளைந்து பறிக்கும் நிலைக்கு வந்துள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையை தக்காளி விலை அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இவ்வாறு விலை உயரும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போலவே வழக்கமாக தக்காளிகளை பயிரிட்டேன். ஆனால் தற்போது தக்காளிக்கு பல்வேறு பகுதிகளிலும், வெளிமாநிலங்களிலும் தேவை அதிகரித்துள்ளதால் தக்காளி விற்பனை விறுவிறுவென நடந்து முடிந்தது. இன்னமும் தக்காளிகள் பறிக்க வேண்டி உள்ளது.

விவசாயிகளுக்கு பெண் கொடுக்க சமுதாயத்தில் பலரும் மறுத்து வருகிறார்கள். இதனால் பல விவசாயிகள் பெண் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க வேண்டும். விவசாயம் எப்போதும் விவசாயிகளை கைவிடாது. இதுபோன்று திடீரென அதிக அளவு வருவாய் விவசாயத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கும். இந்த நம்பிக்கையில் தான் பெரும்பாலான விவசாயிகள், நஷ்டத்தை சந்தித்தாலும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார்கள். இனி வருகிற காலத்தில் விவசாயிகளுக்கு பெண் கொடுக்க தயங்க மாட்டார்கள் என நம்புகிறேன். விவசாயிகளை நம்பி பெண் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!