Skip to content
Home » 11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

11 எம்.பி தொகுதிகளை குறி வைத்தே செந்தில்பாலாஜி கைது… டிஆர் பாலு பேச்சு..

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நேற்று கோவை சிவானந்தா காலனியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர் பாலு எம்.பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில்  எம்பி டி.ஆர். பாலு  பேசியதாவது..  செந்தில் பாலாஜி 5 முறை எம்.எல்.ஏவாகவும், 2 முறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அமலாக்கத்துறை அவரிடம் அத்துமீறி நடந்துள்ளது. சம்மன் கொடுக்காமல் அவரை கைது செய்துள்ளது. கைது நடவடிக்கையின் போது, அமலாக்கத்துறையினர் மிக மிக கொடுமையாக நடந்துள்ளனர். இதுபற்றி நேரம் வரும் போது நீதிமன்றத்தில் தெரிவிப்போம். சம்பவத்தின் போது செந்தில் பாலாஜிக்கு அதிகமாக வியர்த்துள்ளது. காற்று வாங்குவதற்காக வெளியே சென்று, சம்ப் மீது அமர்ந்த அவர், கீழே விழுந்து துடித்துள்ளார். அவர் நடிப்பதாக நினைத்த அமலாக்கத்துறையினர், அவரது கால் தலையை பிடித்து தூக்கி உள்ளனர். ஆனால் தலையை பிடித்து தூக்கியவர், திடீரென போட்டுவிட்டதால் அவரது தலை கான்கிரீட் ஸ்லாப்பில் முட்டி அடிபட்டுள்ளது.  இதனால் அமலாக்கத்துறையினர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீது பண மோசடி குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சேர்த்தால் தான் ஜாமீனில் வெளியே வர முடியாது. இதற்காக அமலாக்கத்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டும் 11 தொகுதிகள் உள்ளன. கொங்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக அடையாளம் காணப்படும் செந்தில் பாலாஜியை, தேர்தல் சீனில் இருந்து அகற்றவே அவரை கைது செய்துள்ளனர். செந்தில் பாலாஜியை அப்புறப்படுத்திவிட்டு 11 தொகுதிகளில் ஜெயித்துவிடலாம் என்று பாஜகவினர் கனவு காண்கின்றனர். ஆனால் இது பகல் கனவு. மாறாக செந்தில் பாலாஜியின் செயல்திறனால் அனைவரும் வீழ்த்தப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!