Skip to content

சரக்கு ரயிலுக்கு ஒதுங்கியபோது நேர்ந்த விபரீதம் – ரயில் இன்ஜின் மோதி தாய், மகள் உடல்சிதறி பலி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் இன்ஜின் மோதியதில், தாய் மற்றும் மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓமலூர் அடுத்த தொளசம்பட்டி, கரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி பாக்கியம் (45), மகள் மஞ்சு (25). மஞ்சு தனது கணவரைப் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாகத் தாய் பாக்கியத்துடன் வசித்து வந்தார். இருவரும் கட்டிட வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இன்று காலை 9.30 மணியளவில், வழக்கம்போல வேலைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து முத்தம்பட்டிக்கு ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றுள்ளனர். ஒரு வளைவான பகுதியில் அவர்கள் சென்றபோது, மேட்டூரிலிருந்து ஓமலூர் நோக்கி ஒரு சரக்கு ரயில் வேகமாக வந்தது. அந்த ரயிலுக்கு வழிவிடுவதற்காக பாக்கியமும் மஞ்சுவும் அருகில் இருந்த இணைப்பாதை தண்டவாளத்திற்கு மாறினர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே நேரத்தில் அந்த இணைப்பாதையில் ஓமலூரில் இருந்து மேட்டூர் நோக்கி இரண்டு ரயில் இன்ஜின்கள் வந்துகொண்டிருந்தன. இதனை அவர்கள் கவனிக்காததால், ரயில் இன்ஜின் அவர்கள் மீது பலமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் பாக்கியம் மற்றும் மஞ்சு ஆகிய இருவரும் உடல்சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சேலம் ரயில்வே போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. கோபண்ணா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரத்திற்காக வேலைக்குச் சென்ற தாய் மற்றும் மகள் ரயிலில் சிக்கிப் பலியான சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!