Skip to content
Home » திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

திருச்சியில் 30% பஸ்களே இயக்கம்…… மக்கள் கடும் அவதி

  • by Senthil

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்  சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்,  பென்சனர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும்  என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். நேற்று சென்னையில்  போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் , தொழிற்சங்கத்தினர்  மற்றும் தொழிலாளர் நலத்துைறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால்  அதிமுக, சிஐடியூ தொழிற்சங்கத்தினர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழ்நாடு  முழுவதும் ஏறத்தாழ 50% பஸ்கள் ஓடவில்லை.

பெரும்பாலும் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் ஓடவில்லை. அந்த பஸ்கள் அனைத்தும் நகரப்புறங்களில் இயக்கப்படுகிறது.  தொமுச, ஐஎன்டியூசி தொழிற்சங்கத்தினர்  வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கவில்லை. எனவே 50 சதவீத பஸ்கள் இயக்கப்படுகிறது.

கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்,  பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்  மாணவ மாணவிகள், வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.  நீண்ட நேரமாக மக்கள் பஸ் நிறுத்தங்களில் காத்திருப்பதை பார்க்க முடிந்தது.  மாணவர்களும் பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டனர்.  அதே நேரத்தில்  92.96% பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு அறிவித்து உள்ளது.

நெல்லையில் 100 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதாகவும், திருச்சியில் 30 சதவீத பஸ்களே இயக்கப்படுகிறது.  திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து  கருமண்டபம், தீரன்நகர் மார்க்கத்தில்  15க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் உள்ளன.   இவற்றில் பெரும்பாலான கல்வி நிலையங்கள் தங்கள் சொந்த பஸ்களை இயக்கினாலும் , பலர்  அரசு பஸ்களையே பயன்படுத்தி வந்தனர். அவர்கள் இன்று பஸ்கள் இன்றி அவதிக்கு உள்ளானார்கள்.

இந்த மார்க்கத்தில் சில பஸ்கள்  எங்கே போகிறது என்பதை பயணிகளுக்கு அறிவிக்கும்  பலகை இல்லாமல்  பஸ்களை இயக்கியது. காரணம் பஸ்களில் ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்ததால்  இடையில் யாரும் பஸ்சை நிறுத்தக்கூடாது என்பதற்காக  இப்படி இயக்கப்பட்டது. இதுபோல  கல்கண்டார்கோட்டை பகுதிகளுக்கும் டவுன்பஸ்கள் இயக்கப்படவில்லை.  சத்திரத்தில் இருந்து  நம்பர் 1 டோல்கேட் வழியாக  முசிறி மார்க்கத்தில் செல்லும் டவுன் பஸ்கள் 75% இயக்கப்படவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 96 பேருந்துகள் உள்ளன இதில் 80 பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது . பெரம்பலூர் மாவட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து பாதிப்பு இல்லை . பெரம்பலூர் டெப்போவில் ஒரே ஒரு பஸ்சை தவிர அனைத்து பஸ்களும் காலை 6 மணிக்கே   பஸ் நிலையத்துக்கு கிளம்பி சென்று விட்டது.

கரூர் மண்டலத்தில் உள்ள கரூர்- 1 ,கரூர்-2, குளித்தலை, அரவக்குறிச்சி, ஈரோடு ஆகிய பணிமனைகளில் இருந்து சுமார் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மீதம் 40% பேருந்துகள் இயங்கவில்லை,

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களால் பிரச்சினை ஏற்படாமல் இருக்கின்ற வகையில் ஒவ்வொரு பணிமனை முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஓட்டுனர்கள் இல்லாத பேருந்துகளுக்கு தற்காலிக பயிற்சி ஓட்டுநர் அமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கரூர் பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் அதிக அளவில் இயங்காததால் உள்ளூர்வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

உரிய நேரத்தில் வேலைக்கு சொல்ல முடியாமலும், பல்வேறு ஊர்களுக்கு செல்ல இருக்கும் நிலையில் அவர்கள் சிரமப்பட்டு பேருந்து தாமதமாக வந்த பிறகு அதில் பயணம் செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும்   பரவலாக 50 சதவீத பஸ்கள் ஓடாததால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். சென்னை கோயம்பேட்டில் இன்று காலை   போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். சென்னையில் எந்தவித பாதிப்புமின்றி பஸ்கள் இயக்கப்படுவதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!