Skip to content
Home » ஜூன் 9ம் தேதி உத்தரவையும் கிடப்பில் போட்ட அதிகாரிகள்…. முதல்வர் கவனிப்பாரா?…

ஜூன் 9ம் தேதி உத்தரவையும் கிடப்பில் போட்ட அதிகாரிகள்…. முதல்வர் கவனிப்பாரா?…

திருச்சி பிரஸ் கிளப் உறுப்பினர்களுக்கு மாற்று நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கி ஒரு மாதமாகியும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தான் வேதனை.. திருச்சி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் 57 பேருக்கு சலுகை விலையில் வீட்டு மனை வழங்க தமிழக முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். இதற்காக விமான நிலையமருகே கொட்டப்பட்டு பகுதியில் சலுகை விலையில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிலத்துக்கான கிரயத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தி வீட்டு மனைக்கான பட்டாவை பயனாளிகள் 57 பேரும் பெற்றுக் கொண்டனர். 18.6.2008 அன்று அனைவருக்கும் பட்டா வழங்கப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்கு காலி மனை வரியையும் செலுத்தினர். இந்நிலையில் மனை ஒதுக்கீடு செய்யப்பட்ட இடம் நீர்நிலை என்பதால் ஐகோர்ட் அறிவுறுத்தலின் பேரில் மனையை அரசு வசம் ஒப்படைக்குமாறும், மாற்று நிலம் வழங்கப்படுவதாக அப்போதைய கலெக்டர் ராசாமணி கேட்டு கொண்டதன் பேரில், இணையான மதிப்புள்ள மாற்று நிலம் வழங்கினால் நிலத்தை ஒப்படைக்கத் தயார் என கூறி, மனைதாரர்களும் இடத்தை மாவட்ட நிர்வாகம் வசம் ஒப்படைத்தனர். மாற்று நிலம் வழங்க அரசுக்கு கலெக்டர்கள் ராசாமணி மற்றும் அவருக்கு பின் வந்த கலெக்டர் சிவராசு ஆகியோர் அடுத்தடுத்து பரிந்துரைகளை அனுப்பினர். இந்த பரிந்துரைகள் மீது உரிய காலத்தில் முடிவெடுக்காமல் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் திருச்சிக்கு வந்த போது அமைச்சர் நேரு உதவியோடு திருச்சி பிரஸ் கிளப் சார்பில் 4 முறைக்கும் மேல் மாற்று நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிக்கையாளர்கள் மனு கொடுத்தனர். மனுக்களை வாங்கி முதல்வர் அதிகாரிகளிடம் கொடுத்ததோடு சரி, ஆனால் மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இறுதியாக கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டி கொடுத்தார். அப்போது, திருச்சி, மதுரை நிருபர்களுக்கு அரசு சலுகை விலையில் வழங்கிய வீட்டு மனை பட்டாக்கள் மீதான நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது குறித்து நடவடிக்கை பரிசீலிப்பதாக முதல்வர் பதில் அளித்தார். பேட்டி முடிந்தபின் விமான நிலையத்தில் முதல்வர், நிருபர்கள் சிலரை அழைத்து பிரச்னை குறித்து தனியாக விரிவாக விபரம் கேட்டார். இதையடுத்து அடுத்தடுத்து ஒரு மணி நேரம் மிக வேகமாக பிரச்னை குறித்து பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகளிடம் உளவுத்துறை முதல் அரசு உயரதிகாரிகள் வரை மனுக்கள் தொரட்பான விபரங்களை கேட்டு பெற்று முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதனால், நிலத்தை உரிய பணம் செலுத்தி கிரையம் பெற்று 16 ஆண்டுகளாக எந்த வித பலனும் அனுபவிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மாற்று நிலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பத்திரிக்கையாளர்களிடம் துளிர்த்தது. ஆனால், சில நாட்களில் அந்த நம்பிக்கையும் மறைந்து போனது. மாற்று நிலம் தொடர்பான புதிய பரிந்துரை அனுப்பும் பணி பாதியிலேயே நின்று போனது. முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் கோரிக்கையை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். அன்று முதல்வர் விவரம் கேட்ட போது பரபரத்த அதிகாரிகள் அதன்பின்னர் வழக்கம் போல் மறந்துவிட்டனர்…. கவனிப்பார்களா அதிகாரிகள்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!