Skip to content
Home » திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

திருச்சி …. 3 வழித்தடத்தில் மெட்ரோ ரயில்…. மாநகராட்சி பட்ஜெட்டில் தகவல்

  • by Senthil

திருச்சி மாநகராட்சி  கூட்டம் இன்று நடந்தது.  கூட்டத்திற்கு மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி, கமிஷனர் வைத்திநாதன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  இந்த கூட்டத்தில்  மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர்  முத்துசெல்வன், 2023 – 24  ஆண்டுக்கான மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பீடு  அறிக்கையை(பட்ஜெட்)  மேயர் அன்பழகனிடம்  தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில் 2022 -2023 ம் ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி மாநகராட்சிக்கான வருவாய் ரூ.1,31,018.80 லட்சம், செலவு ரூ.1,43,535.45 லட்சம் எனவும் ரூ.12,516.65 லட்சம் பற்றாக்குறையாகவும் கல்வி நிதியில் வருவாய் ரூ.3056 லட்சம், செலவு ரூ.1552, உபரி ரூ.1504 லட்சம் எனவும் குறிப்பிட்டார். மேலும் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த பணிகளையும், நடந்து வரும் பணிகளையும் பட்ஜெட்டில் வாசித்தார். அதில் சாலைகள், பராமரிப்பு பணிகள், வணிக வளாகம், கழிப்பிடம் உள்ளிட்ட 70 பணிகள் ரூ.72340.74 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.

2023 – 2024 ம் ஆண்டில் திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.5கோடி  மதிப்பீட்டில் 300 கி.மீ  மண்சாலைகளை தார்சாலைகளாகவும், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், பேவர் பிளாக்குகள் பொருத்தப்பட்ட சாலைகளாகவும் மாற்றப்படும்,

உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை, ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் 65 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல்

65 வார்டுகளிலும் ரூ.1625 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக்கட்டிடம் கட்டப்படும்.

திருச்சி மாநகரில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் இல்லம் கட்டப்படும்,

ரூ.1கோடி  மதிப்பீட்டில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டும் பணி உள்ளிட்ட 10 புதிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதர திட்டங்களின் கீழ் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த சந்தை, ஒலிம்பியாட் அமைக்கும் பணி, சமுதாய கூடம் உள்ளிட்ட 11 பணிகளும், கல்வி நிதியின் கீழ் ரூ.2085 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் பணிகள்  மேற்கொள்ளப்படும்.

பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னதாக நடந்த அவசர கூட்டத்தில் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு   பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம்   மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்து நடத்திய ஆய்வின் அறிக்கை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி திருச்சியில் செயல்படுத்தப்பட  சாத்தியமாக உள்ள  3 மெட்ரோ ரயில்வே வழித்தடங்கள் பற்றிய விவரம் வருமாறு:

1. சமயபுரம் முதல் வயலூர்  வரை – 18.7 கி.மீ

2. துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை” – 26 கி.மீ(மத்திய பஸ் நிலையம் வழியாக)

3. “திருச்சி ஜங்ஷன் முதல் பஞ்சப்பூர் வரை” (விமான நிலையம் ,ரிங்ரோடு வழியாக) – 23.5 கி.மீ.

திருச்சி மாநகராட்சியின் 2023-24ம் நிதி ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.1,026.70 கோடி.  செலவு ரூ.1,025 கோடியே 95 லட்சத்து 20 ஆயிரம். .  உபரி வருமானம்  ரூ.74.80 லட்சம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!