Skip to content
Home » திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது…

திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது…

அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்.

திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும் கல்வி, தொழிற்சாலை, ஆராய்ச்சி மையம், போலீஸ் உள்ளிட்ட பல  துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு  விருது வழங்கும் நிகழ்ச்சி என்ஐடி இயக்குனர் அகிலா தலைமையில் நடந்தது.   நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் நிறுவன இயக்குனர் பாஸ்கர்பட் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் என்ஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி பேசியது:

இந்தியாவில் உள்ள என்ஐடிகளில் முதலிடத்தில் இருக்கும் திருச்சி என்ஐடியில் படித்த பலர் உலகெங்கும் பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்வி, விளையாட்டு, கலை உள்ளிட்ட பல துறைகளிலும் என்ஐடி சிறந்து விளங்குகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் இவர்களின் கூட்டு முயற்சிதான் இத்தகைய சிறப்புக்கு காரணம். என்ஐடியில் உள் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் நிதி உதவி செய்து வருகிறது. முன்னாள் மாணவர்கள் தங்களின் திறமை மற்றும் அனுபவங்களை இளம் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் தொகை மட்டுமின்றி இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கிலோ மீட்டர் துாரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 148 விமான நிலையங்கள் மூலமாக அதிக அளவில் பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் நடக்கிறது. சந்திரயான்–3 விண்கலம் நிலவில் இறங்கி பரிசோதனை மேற்கொண்டதை  8.06 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஸ்வச்பாரத் திட்டம் மூலம் இந்தியாவில் சுகாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பொறியியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பொருளாதார நிலைமை உயர்ந்துள்ளது என்றார்.

என்ஐடி இயக்குனர் அகிலா பேசியது: முன்னாள் மாணவர்கள் என்ஐடியில் துாதுவர்களாக விளங்குகின்றனர். நிதி உதவி, சர்வதேச கருத்தரங்கு, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றில் என்ஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் பங்கு மகத்தானது. பல சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர், ஆசிரியர் பரிமாற்றம், பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர், ஆசிரியர்கள் புரிந்துணர்வுடன் செயல்படுவதால் திருச்சி என்ஐடி சிறந்து விளங்குகிறது என்றார்.

நிகழ்ச்சியில் என்ஐடி முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!