திருச்சி எஸ்ஆர்எம் குத்தகை காலம் முடிந்த நிலையில் ஓட்டலை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் குத்தகை காலத்தை மேலும் 20 ஆண்டுக்கு நீட்டிக்க கோரி ஓட்டல் நிர்வாகம் சார்பில் 13.4.2024-ல் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை நிராகரித்து தமிழக சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளர் 12.6.2024-ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து குத்தகை காலத்தை நீட்டிக்க உத்தரவிடக்கோரி ஓட்டல் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு தரப்பில், குத்தகை காலம் முடிந்த நிலையில் அந்த இடத்துக்கு ஓட்டல் நிர்வாகம் உரிமை கோர முடியாது. இனிமேல் அந்த ஓட்டலை சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் மனுதாரரிடம் ஆலோசனை நடத்தாமல் குத்தகை கால நீட்டிப்பு கோரிக்கையை நிராகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையேற்க முடியாது. எனவே குத்தகை கால நீட்டிப்பு விண்ணப்பத்தை நிராகரித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலாளருக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. அவர் மனுதாரரை அழைத்து பேசி, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து தகுதி மற்றும் சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.