இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாடு சென்னையில் இன்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது. வரலாற்று உணர்வுகளை ஊட்டுவது இன்றைய காலத்தின் தேவை; மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. எந்த அமைப்பாக இருந்தாலும் உருவாக்குவது எளிது, அதை தொடர்ந்து நடத்துவதுதான் கடினம். கற்பனையாக கூறப்படும் வரலாற்றை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. இந்த வகையான வரலாற்று திரிபுகள் தான் சூழ்ந்துள்ள ஆபத்து ஆகும். அறிவியல் பார்வையை உருவாக்குவதான் இன்றைய காலத்தின் தேவை. பொய் வரலாறுகளை புறந்தள்ளி மக்களை மையப்படுத்தி வரலாறுகள் எழுதப்பட வேண்டும். “கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தமிழர்களின் பழங்கால நாகரிகத்தை பறைசாற்றுகின்றன. கீழடியில் மிகப் பெரிய அருங்காட்சியகம் திறக்கப்பட இருக்கிறது உண்மையான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது கடமையாக கருதுகிறோம். நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான்; ஆனால் பழமைவாதிகள் அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.