பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள கோயம்பள்ளி – மேலப்பாளையம் உயர்மட்டப் பாலம்: முதல்வருக்கு கோரிக்கை வைத்த மாணவர்கள்: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வுசெய்து பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி மற்றும் மேலப்பாளையம் கிராமங்களை இணைக்கும் வகையில்

கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம், பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், இருபுற அணுகுச்சாலைகள் அமைக்கப்படாத காரணத்தால் பாலம் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை.
இந்தப் பாலம் திறக்கப்பட்டால், கோயம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கரூர் நகருக்குள் சென்று சுமார் 20 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல்

நேரடியாக மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவ சேவைகளை நாடும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி இருந்த போதிலும், பாலம் மற்றும் அணுகுச்சாலை பணிகள் முழுமை பெறாததால் மக்கள் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் இன்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து நிறைவு செய்து பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
