Skip to content
Home » உலக சாதனை புரிந்த வள்ளிக் கும்மியாட்டம்….16,000 பெண்கள் பங்கேற்பு…

உலக சாதனை புரிந்த வள்ளிக் கும்மியாட்டம்….16,000 பெண்கள் பங்கேற்பு…

  • by Senthil

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் கட்சிக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தின் மேற்கு மண்டலம் என அழைக்கப்படும் கொங்கு மண்டலத்தில், ஒரு முக்கிய கட்சியாக இருப்பது கொங்கு மக்கள் தேசிய கட்சி. திமுகவுடன் தற்போது கூட்டணியில் உள்ள இந்த கட்சி, வரும் 12-ம் தேதி திமுக தேர்தல் பேச்சுவார்த்தை குழுவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

வள்ளிக்கும்மி நடனம்
இந்த சூழலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அக்கட்சியின் சார்பில், கொங்கு மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக வள்ளிக்கும்மியாட்டம் என்ற நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாக அறியப்படும், இதன் மீதான ஆர்வம் மீண்டும் மக்களிடையே எழுந்துள்ளது. அதனை மேலும், பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த வள்ளிக் கும்மியாட்டம் என்ற நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வள்ளிக்கும்மி நடனம்
ஈரோடு, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பல்லடம், நாமக்கல், சேலம், தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த 16,000 பெண்கள் நடனமாடி அசத்தினர். அப்போது, பெண்கள், சந்தனம், சிவப்பு மற்றும் பச்சை ஆகிய நிறங்களைக் கொண்ட ஓரே சீருடையில் வள்ளி முருகன் திருமணத்தை முன்னிறுத்தி கும்மியாட்ட கலை ஆசிரியர்கள் பாடிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு ஏற்ப கும்மியடித்து நடனமாடினர்.
வள்ளிக்கும்மி நடனம்
ஒரே நேரத்தில் நாட்டுப்புறக்கலையில் 16,000 பேர் ஈடுபட்ட இந்த நிகழ்வு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. இந்த வள்ளிக்கும்மியாட்டம் கின்னஸ் சாதனையைப் பார்க்கச் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!