Skip to content
Home » விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட விஜயகாந்த், சினிமா வாய்ப்பு தேடுவதற்காக விஜயராஜ் என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்டார். மதுரை மாகாளிபட்டியில் தனது அப்பாவின் அரிசி ஆலையைக் கவனித்துக்கொண்ட அவர், சினிமா வாய்ப்பு தேடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். சினிமாத்துறையில் எந்த வித அனுபவமோ, பின்புலமோ இல்லாமல் , தன் சொந்த முயற்சி, தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு  சினிமாவிலும், பின்னர் அரசியலிலும் சாதித்து காட்டியவர்.

ரஜினியை போன்று ஹேர்ஸ்டைலும் முகவெட்டும் கொண்ட  விஜயகாந்த், ரஜினிக்கு தம்பியாக ’என் கேள்விக்கு என்ன பதில்’ என்கிற படத்தில் தான் முதன்முதலில் 101 ரூபாய் முன்பணம் வாங்கிக்கொண்டு நடித்தார். தொடர்ந்து எம்.ஏ.காஜா இயக்கிய ‘இனிக்கும் இளமை’ படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கிடைத்தது. விஜய்ராஜ், விஜயகாந்தாக மாறியது இந்த படத்திலிருந்துதான்.

சினிமாவில் அவருக்காகச் சிந்தித்தவர், கதை கேட்டவர், மேனேஜராக இருந்தவர் எல்லாம் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தர். சினிமாவை தாண்டி, ஏழை எளிய மக்களுக்கு உதவுவதையும் விஜயகாந்த் தொடர்ந்து செய்து வந்தார். தன்னை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனம் படைத்தவர் என்று அவருடன் பணியாற்றிய சக கலைஞர்கள் பலரும் இன்று வரை சொல்வதை பார்க்கமுடியும்.

 

படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுவே லைட்மேன் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கும் தரப்பட வேண்டும் என்ற திட்டத்தை தனது படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.

 சுமார் 153 படங்களில் நடத்துள்ளார் விஜயகாந்த். 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியான நடிகராக வலம் வந்தார். ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நட்சத்திர கலைவிழா உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதுவரை இருந்த நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார். மேலும் நலிந்த கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்தார். நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

2002-ம் ஆண்டு காவிரி பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தார்.

இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில்  அதீத ஈடுபாடு கொண்ட விஜயகாந்த் விடுதலை புலிகள் தலைவர் மீது கொண்ட பேரன்பால் தன் மகனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடிகர், நடிகைகளுடன் உண்ணாவிரதம் நடத்தி, அப்போதைய தமிழக ஆளுநரிடம் மனு அளித்தார்.

2000ம் ஆண்டு தனது ரசிகர் மன்றதுக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தினார். தனது  திரைப்படங்களில் தனது கட்சிக் கொடியை இடம்பெறச் செய்ததுடன், அரசியல் ரீதியான வசனங்களையும் இடம்பெறச் செய்தார் விஜயகாந்த். தமிழ் மக்களுக்கு நல்லாட்சி தரவேண்டும் என கட்சி தொடங்கிய விஜயகாந்த்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. மிகவும் சுறுசுறுப்பாக, மேடைப்பேச்சுகளின்போது அனல் பறக்கவிட்ட விஜயகாந்த்தின் உடல்நிலையில் மெல்ல மெல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கின. எதிர்கட்சிகளை நோக்கி சிங்கம் போல மேடையில் கர்ஜித்த அவரது தடுமாற்றத்தைக் கண்டு தொண்டர்களும், ரசிகர்களும் கலங்கிப் போனார்கள்.

2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற போது விஜயகாந்தால் முன்பு போல பிரச்சாரக் கூட்டங்களில் பரபரப்பாக இயங்க முடியவில்லை. அவரது முகத்திலும் உடலிலும் சோர்வு தெரிந்தது. 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து சந்தித்த தேமுதிக, போட்டியிட்ட 104 தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று நான்கு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் படுதோல்வியடைந்தது.

இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, இலவச கணினிப் பயிற்சி மையம் என எண்ணிடலங்கா உதவிகளைச் செய்தவர். சுனாமி பேரிடர், குஜராத் பூகம்பம், கார்கில் போர் உள்ளிட்ட துயரங்களின்போது ஏராளமான நிவாரண உதவிகளை அனுப்பி உதவியர் விஜயகாந்த்.

சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழ் இனத்துக்கே இழப்பு. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!