Skip to content
Home » 72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

72 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்… விடை பெற்றார் சொக்கத்தங்கம்….

  • by Senthil

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் நேற்று காலை 6.10 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் இடநெருக்கடியை கருத்தில் கொண்டு விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் மீண்டும் மதியம் 2.45 மணிக்கு ஊர்வலமாக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஊர்வலம் வரும் வழி நெடுகிலும் பொதுமக்கள் கேப்டன் கேப்டன், இனி எப்போது பார்ப்போம் என மக்கள் கதறி அழுத காட்சிகள் நெஞ்சை பிசைந்தன. கேப்டன் உடல் வைக்கப்பட்ட வாகனத்தில் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் இருந்தனர். அவர்கள் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தவாறே கண்களை குளமாக்கிக் கொண்டே வந்தனர். லட்சோப லட்ச மக்கள் வெள்ளத்தில் விஜயகாந்தின் ஊர்வலம் தேமுதிக அலுவலகத்தை மாலை5.45 மணிக்கு அடைந்தது.
அங்கு சந்தன பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ஜெயக்குமார், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, எம்பி டி.ஆர். பாலு உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் பூட்ஸ், வேட்டி சட்டை கழுத்தில் கட்சி துண்டுடன் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி 72 குண்டுகள் முழங்க தமிழ்நாடு அரசு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்குகளை மகன்கள் சண்முக பாண்டியனும், விஜய பிரபாகரனும் செய்தனர். இதையடுத்து குழிக்குள் இறக்கப்பட்ட அவரது உடலை கடைசியாக அவரது குடும்பத்தினர் பார்த்து கண்ணீர் சிந்தினர். இதையடுத்து விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!