பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில், குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில் 3000 திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் சுத்தமான குடிநீர், தரமான தெரு சாலை,
மயான சாலை, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்களாக வசித்து வருவதாகவும் புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் , குப்பைகள் அகற்ற வேண்டும், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாடை, துடைப்பம் காலி குடங்களுடன் மாலாபுரம் ராமநாதன் தலைமையில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாபநாசம் துணை கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
