தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் கடந்த ஜூன் 27ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அருவி வறண்டு பாறைகளாக காட்சியளித்ததால், அங்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானல் வனப்பகுதிகளான வட்டக்கானல் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, இன்று காலை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்க தொடங்கியது. 80 நாட்களுக்கு பிறகு அருவி பகுதி முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை கண்டு சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அருவியின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருவதுடன், நாளை முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கலாம் என அறிவித்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு அருவி திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளுடன் சேர்ந்து அப்பகுதி மா விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
