திமுக எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை என்றும் குறுக்கு வழியில் இல்லாமல் மக்கள் மனதை வென்றே ஆட்சியைப் பிடிப்போம் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம் என்றும், கரூருக்கு தவெக தலைவர் விஜய் செல்வதற்கு முன்பாக செந்தில்பாலாஜியைக் கைது செய்ய வைப்பதே தவெகவின் நோக்கம் என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெக தரப்பில் வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார். தவெக ஆட்சியை நாங்கள் கவிழ்க்க மாட்டோம் என உறுதி அளித்த அவர், குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றார். மேலும், தவெக தலைவர் விஜய் கரூருக்குப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக முக்கியப் பிரமுகரான செந்தில்பாலாஜியைக் கைது செய்ய வைக்க வேண்டும் என்பதே தவெகவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
