குளித்தலை அருகே கரும்புக்காட்டில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தெற்கு மேலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்(50). இவரது மனைவி சிவரஞ்சனி(40). இவர்களது மகன் விகாஷ்(23). சுரேஷ் திருச்சியில் பழக்கடையில் விற்பனையாளராகவும், விகாஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகின்றனர். இருவரும் 15 நாள் அல்லது மாதம் ஒருமுறை வீட்டுக்கு வருவார்கள்.
இதனால் சிவரஞ்சனி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை நீண்டநேரமாகியும் சிவரஞ்சனியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் அவர் இல்லை. உடனே மற்ற உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உறவினர்கள் அங்கு திரண்டு அவரை தேடினர். அப்போது அவரது வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் உள்ள கரும்பு காட்டில் சிவரஞ்சனி கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சிவரஞ்சனி அணிந்திருந்த தோடு, செயின் உள்ளிட்ட நகைகள் எதுவும் திருட்டு போகவில்லை. இதேபோல் வீட்டில் திருட்டு நடந்ததற்கான அறிகுறி இல்லை. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
