Skip to content
Home » எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளர் இராசேந்திர சோழன் காலமானார்… அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் ஒப்படைப்பு…

எழுத்தாளார் இராசேந்திர சோழன் 1945 டிசம்பர் 17 ம் தேதி  அப்போதைய ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்ததால், இவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு செல்ல வலியுறுத்தினர். ஆனால் பள்ளி ஆசிரியராக விரும்பாத இராசேந்திர சோழன் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்குச் சென்றார்.

அங்கு கிடைத்த வேலைகளை செய்து அதில்  கிடைத்த வருவாயைக் கொண்டு வாழ்ந்து வந்தார்.  பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப்பின்  தாய் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற 1965 ல் திரும்பி சென்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிப்பைப் முடித்தார். 1968-ல் ஆசிரியராக பணியில் சேர்ந்து இருபது ஆண்டு காலம் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் வசித்து வந்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்து வந்த அவர் 21வது அம்சம், புற்றில் உறையும் பாம்புகள் உள்ளிட்ட நாவல்களை எழுதியுள்ளார். சிறிது காலமாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சென்னையில் இன்று காலை காலமானார். அவரது உடல், அவர் விருப்பப்படி மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்படுகிறது.

இன்று மாலை  3 மணியளவில் எழும்பூர் நீதிமன்றம் அருகே நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள அவரது மகனின்  வீட்டில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடல் ஒப்படைக்கப்படுகிறது.

இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் சிதம்பரத்தில் வசித்து வருகிறார். மகன் ஆர்.பார்த்திபன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார். எழுத்தாளார் இராசேந்திர சோழனின் மறைவு இலக்கிய உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரது உடலுக்கு  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!