வாழை இலை வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 66 ) இவர் வாழை இலை விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22-ந்தேதி இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாழை இலையுடன் திருவள்ளுவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் அவர் மீது மோதுவது போல் சென்றுள்ளார். இது குறித்து அவர், வாலிபரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால் அவர்களுக்குள் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனசேகரை கையால் தாக்கியுள்ளார். இது குறித்த தனசேகர் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் கல்லூரி பெண் ஊழியரிடம் ரூபாய் 1.10 லட்சம் மோசடி
திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் இரண்டாம் தேதி இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஆன்லைன் வர்த்தக தொடர்பான கம்பெனியில் இருந்து பேசுகிறேன். இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியுள்ளார். அதனை நம்பிய அவர் அதில் முதலீடு செய்து எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து மறுபடியும் அவரை தொடர்பு கொண்ட மர்மநபர் மேலும் இதில் முதலீடு செய்தால் இழந்த பணத்தை எப்படி மீட்பது என்பது குறித்து அவரிடம் ஆசை வார்த்தை கூறி, உள்ளார். அவரது வார்த்தைகளை நம்பி அவர் ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை பல்வேறு தவணைகள் மூலம் மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த மர்ம நபரை தொடர்பு கொண்ட போது அவரது எண்கள் துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ஆன்லைன் மூலம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் கடந்த 22-ந்தேதி 66 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்தாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் கிராம நிர்வாக அதிகாரி ஹரிகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த முதியவரின் பெயர் ராஜா என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் எதற்காக இங்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
