கோவை, அரசு மருத்துவமனை அருகில் முகமது ஹனீபா என்பவர் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் அவரிடம் பேச்சுக்கொடுத்து தங்களிடம் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் உள்ளதாக கூறி வீடியோ ஒன்றை காண்பித்துள்ளனர். மேலும் அந்த கள்ள நோட்டுகள் அச்சு அசலாக உண்மையான பண நோட்டுகளை போலவே இருக்கும் என கூறி 1 லட்சம் ரூபாய் உண்மையான பணத்தைக் கொடுத்தால் 3 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து முகமது இங்கேயே தாங்கள் இருக்கும்படியும் நான் சென்று பணத்தை எடுத்து வருகிறேன் எனக் கூறி சென்றுள்ளார். இதை நம்பிய மூன்று பேரும் அங்கேயே காத்திருந்த நிலையில் அவர் சென்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற காவலர்கள் மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கோவை மற்றும் மதுரையை சேர்ந்த பிரசாத், கலைவாசன், சண்முகபிரசாத் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர்களை கைது செய்து, ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
மேற்கொண்டு கள்ள நோட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்களிடம் கள்ள நோட்டு எதுவும் இல்லை என்பதும் இது போன்ற வீடியோக்களை காண்பித்து ஆசை வார்த்தை கூறி பணத்தை பறித்து செல்ல முயன்றதும் தெரிய வர மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.