கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெச்சரில் கேக்கை வைத்து, அதை பட்டா கத்தியால் சிலர் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
இதில், பொள்ளாச்சியில் உள்ள பல ஆம்புலன்ஸ் நிறுவனங்களை சேர்ந்த ஓட்டுநர்களே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களான சந்தோஷ், சிவகுருநாதன், வாஞ்சிநாதன், சுரேஷ்குமார் உள்ளிட்ட 11 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியை பொறுத்தவரை, ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் எனும் முகமூடியில் சில அராஜக பேர்வழிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, பொதுமக்களை தரக்குறைவாக பேசுவது போன்ற செயல்களில் இவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாகவும், இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
