கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாத 125 வீடுகள் – வாடகை வீடுகளில் தவிக்கும் மக்கள். தமிழக முதலமைச்சர் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கொளந்தாகவுண்டனூர் பகுதியில், கடந்த 1993-ஆம் ஆண்டு கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
காலப்போக்கில் குடியிருப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, பழைய கட்டிடங்களை

இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 125 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் சுமார் ஓராண்டுக்கு முன்பே நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
புதிய குடியிருப்பு வளாகத்தில் லிப்ட், சத்துணவு மையம், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், சாக்கடை வசதி, சுற்றுச்சுவர், குடிநீர் உள்ளிட்ட சில பணிகள் முழுமையாக நிறைவடையாததால், கட்டி முடிக்கப்பட்டும் புதிய வீடுகளை பயனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்ட நிலையில், பல குடும்பங்கள் தற்போது வாடகை வீடுகளில் வசித்து வருவதால், தங்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
புதிய குடியிருப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, குடியிருப்பு வளாகத்தில் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, 125 வீடுகளையும் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி, நீண்டகாலமாக காத்திருக்கும் பொதுமக்களுக்கு புதிய குடியிருப்புகளை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
