பெரம்பூர்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொளத்தூர் பகுதியில் முதல்வர் விஜய் தோற்றத்தில் வைத்திருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை கொளத்தூர் துர்கை நகரில் இளைஞர்கள் சார்பில், முதல்வர் விஜய் போல் கோட், சூட் அணிந்து சட்டசபையில் கை சைகையுடன் இருப்பதுபோல 9 அடி உயரத்துக்கு விநாயகர் சிலை வைத்திருந்தனர். இதற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், இந்த விநாயகர் சிலையால் சர்ச்சை ஏற்படுகிறது என்று கூறி போலீசார் அந்த சிலையை எடுக்கும்படி அறிவுறுத்தினர்.பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்
இதையடுத்து விஜய் தோற்றத்தில் இருந்த விநாயகர் சிலையை வேஷ்டி கட்டி விஜய் சைகை காண்பிப்பதுபோன்றும் ஆசிர்வாதம் செய்வது போன்றும் மாற்றி அமைத்தனர். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த விநாயகர் சிலையை செய்தவர்களை வைத்தே அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக அந்த பகுதியில் வேறு ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையில் விஜய் தோற்றத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையும் நேற்று முன்தினம் அகற்றப்பட்டது.
