சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் கார் ஓட்டுநர் பாலா என்ற பெருமாளை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஏற்கனவே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன. இந்நிலையில், மேலும் ஒரு சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி 9-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் பாலா அதிரடி கைது!
புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில், சிறுமிகளை ஜெம் வீரமணியிடம் அழைத்துச் செல்வதற்கு ஓட்டுநர் பாலா என்கிற பெருமாள் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நவம்பர் 14-ம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரைக் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராயப்பேட்டை வீட்டில் போலீசார் சோதனை!
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். மயிலாப்பூர் வட்டாட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
13 சிறுமிகள் தொடர்பான புகார்கள்; 10 பேர் கைது!
இதுவரை 13 சிறுமிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் ஜெம் வீரமணி மீது மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக ஜெம் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் ஒரு வழக்கில் கடந்த நவம்பர் 11-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற வழக்குகளில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புதிதாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
