முருகப்பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படும் விரதங்களில் முக்கியமானதான கந்தசஷ்டி விரதம் 7-நாட்கள் கடைபிடிக்கப்படும்.
திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அருணகிரிநாதருக்கு காட்சிதந்து, வயலூருக்கு வா…. என்று அழைத்த முருகன், அவருக்கு திருப்புகழ் பாட வரமளித்த தெய்வீக

திருத்தலம் திருச்சி வயலூர் முருகன் கோவிலாகும். கோவிலின் எதிரே உள்ள சக்தி தீர்த்தத்தில் தொடர்ந்து நீராடி தொழுநோய் நீக்கப்பெற்றார் என்பதும் வரலாறு.
முருகபெருமானின் 7வதுபடைவீடு என்று போற்றப்படும், இத்தகைய சிறப்புமிக்க வயலூர்

முருகன் கோவிலில் பிரசித்திபெற்ற கந்தசஷ்டி விழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
சஷ்டியையொட்டி வள்ளி, தேவாசேனை சமேதராக காட்சியளித்த சுப்ரமணியசுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், லட்சார்ச்சனையும் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி சிங்காரவேலவர் வெள்ளி மயில்வாகனத்தில் திருவீதியுலா வரும் வைபவமும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, இன்று காலை வயலூர் கோவில் ஆதிநாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில், சக்திவேலுடன் கோவில் முன் எழுந்தருளினார். தொடர்ந்து, உற்சவர் முருகன் பல்லாக்கில், கோவிலை வலம் வந்து, ஆதி நாயகி அம்மனிடம், வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சக்திவேலை பெற்றுக்கொண்ட முருகப்பெருமான், இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, அரோகரா கோஷம் முழங்க, சூரபத்மனை வதம் செய்து, மோட்சம் அளித்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
