Skip to content

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்சாக பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளியாகி உள்ள அந்த வீடியோவில், பரத் என்ற இளைஞர் சமீபத்தில் குற்ற செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி அதனை நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கானா பாடல் இசையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற பகுதிகளில் வீடியோ எடுப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், அந்த நபர் எடுத்த வீடியோ தற்போது 3.62 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ குறித்து பலரும் அந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடுவது சட்டபடி குற்றமாகும். இது போன்ற நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கையும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சென்னையில் நீதிமன்றம் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நிற்பதை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரின் பெயர் பரத் என்பதும், இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது, தனது நண்பரை வீடியோ எடுக்கக்கூறி பின்னர் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டதும் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் நடப்பதை வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர் பரத்தை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!