தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த நாளில் நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்வது பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறும் என ஐதீகம் நிலவுகிறது.
குறிப்பாக அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

செய்தால் குடும்ப நலன், வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
இதன் காரணமாக தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நதிகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் திரண்டு புனித நீராடி தர்ப்பணம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரை ஒட்டிய மாயனூர், தளவாபாளையம், நெரூர், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூடினர்.
குறிப்பாக மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் புனித நீராடிய பின்னர், வாழை இலையில் பழம், வெற்றிலை, பாக்கு, எள்ளு, அரிசி ஆகியவற்றை வைத்து வரிசையாக அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

