தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை அருகே உள்ள தேவன்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு, சரிதா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று, இளங்கோவன் வீரமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (24) மற்றும் முத்துக்குமார் (24) ஆகியோருடன் சேர்ந்து பட்டயான்கலம் பகுதியில் உள்ள ஒரு மோட்டார் கொட்டகையில் மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து இளங்கோவனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். குறிப்பாக அவரது தலை மற்றும் முகத்தில் கைகளால் பலமாகத் தாக்கியதில், இளங்கோவன் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
தகவலறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கபிஸ்தலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளங்கோவன், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார், கொலையாளிகள் தப்பியோடிய இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

