கும்பகோணம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்கள் மகாமத்துடன் தொடர்புடைய கோவில் ஆகும். இந்த கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிவன் கோவில்களில் சாமி வீதியுலா நடந்தது. விழாநாட்களில் தினமும் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு நடந்தது.
தீர்த்தவாரி
கோடீஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந் தேதி ஓலைசப்பரமும், 29-ந் தேதி திருகல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று தீர்த்தவாரி நடந்தது. அப்போது நாகேஸ்வரர் பிரஹந்நாயகி அம்மனுடன் மகாமகம் குளத்தில் எழுந்தருளினர். அங்கு அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இதையடுத்து தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

