அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள நகை கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக 177 சவரன் நகை, 5 கிலோ 390 கிராம் வெள்ளிப் பொருட்களை கொண்டுவந்த வாகனத்தில், தங்க நகைகளை விற்பனை செய்வதற்கான உரிய ஆவணங்கள் மற்றும் வாகன எண் பதிவு இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் உள்ள நகை கடைகளுக்கு, சென்னையில் உள்ள ஒரு தனியார் நகை கடைக்கு சொந்தமான நகை விற்பனை செய்யும் வாகனம், நகைகளை விற்பனை செய்ய வந்துள்ளது. வாகனத்தில் இருந்த ஊழியர்கள் தங்க நகைகளை கடைக்கு எடுத்துச்

செல்வதை பார்த்த, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது நகை விற்பனை செய்ய வந்துள்ளதாகவும், அரியலூரில் உள்ள தனியார் கடைக்கு நகைகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள நகைகளை விமானத்தின் மூலம் சென்னைக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர் , வாகனத்தில் 818 கிராம் புதிய தங்க நகையும் 516 கிராம் பழைய தங்க நகையும் என மொத்தம் ஒரு கோடியே 94 லட்சம் மதிப்பிலான 177 சவரன் தங்க நகையும், 13 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான 5 கிலோ 390 கிராம் வெள்ளி பொருட்களும் இருந்தது தெரியவந்தது. மேலும் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களுக்கான ஆவணங்கள் முழுமையாக வைத்திருந்த போதிலும், கடைகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்ததற்கான விலைப்பட்டியலில் (Invoice), வாகனத்தின் எண் இல்லாததால் சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படையினர், அரியலூர் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெயங்கொண்டதிற்கு வந்த வருமான வரித்துறையினர் வாகனத்தில் இருந்த தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை ஆய்வு செய்து, அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் நகைக்கான விலைப்பட்டியலில்(Invoice) வாகனத்தின் எண் இல்லாததால், வாகனத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். உரிய ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்தால், ஆய்வு செய்து நகைகளை மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வருமானத்துறை அதிகாரிகளும் இந்த நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

