Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சிறுமி வன்கொடுமை… குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க கோரி.. அஞ்சலிப் பேரணி

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் செயலைக் கண்டித்தும், உயிரிழந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் தஞ்சாவூரில் உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலிப் பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, சேகர் குடியிருப்பில் ஜோதி அறக்கட்டளை சார்பில் இந்த மௌன அஞ்சலி மற்றும் கண்டன நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது.

திரண்ட நூற்றுக்கணக்கான பெண்கள்:

இந்த நிகழ்வில் சேகர் குடியிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தாய்மார்கள் மற்றும் இளம் பெண்கள் திரளாக திரண்டு தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு, அமைதியான முறையில் மௌன அஞ்சலி செலுத்திய அவர்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

நூறடியில் ‘நீதி வேண்டும்’ – அகல் விளக்கு முழக்கம்:

நிகழ்வின் சிறப்பம்சமாக, அப்பகுதியில் உள்ள சாலையில் சுமார் நூறு அடி நீளத்திற்கு அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி, அதன் மூலம் “நீதி வேண்டும்” என்ற வாசகத்தை வடித்து அலங்கரித்திருந்தனர். இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் சுடர்விட்டு எரிந்த அந்த தீபங்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் ஒட்டுமொத்தக் குரலை ஆணித்தரமாகப் பிரதிபலிப்பது போல் அமைந்திருந்தது.

நிகழ்வை முன்னெடுத்து நடத்திய ஜோதி அறக்கட்டளையின் நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேசுகையில்:

” கோவையில் நடந்துள்ள இந்த கொடூரச் செயல் ஒட்டுமொத்த மனிதநேயத்திற்கும் எதிரானது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் காலதாமதமின்றி, சட்டத்தின் முன் மிகக் கடுமையான

தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும். இனி எந்தவொரு குழந்தைக்கும் இதுபோன்றதொரு நிலை ஏற்படக் கூடாது” என்று மிக உருக்கமாகத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்றும் இந்த நிகழ்வின் மூலம் ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை பொதுமக்கள் சார்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

error: Content is protected !!