தஞ்சாவூர் அருகே 8நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிலவன் (16). தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுமுறை என்பதால் அருகில் சிவகாமிபுரம் பகுதியில் உள்ள குளத்திற்கு நேற்று மதியம் தனது நண்பர்களுடன் நிலவன் குளிக்க சென்றார். நிலவனுக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் குளித்து கொண்டு இருக்கும் போது நிலவன் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் குளத்து நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதை பார்த்து அவருடைய நண்பர்கள் அலறியுள்ளனர். இருப்பினும் நிலவனை மீட்க முடியவில்லை. அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் இறங்கி நிலவனை கரைக்கு கொண்டு வந்தனர். உடன் நிலவனை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த வல்லம் போலீசார் நிலவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
