கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அமராவதி ஆற்றின் குறுக்கே கோயம்பள்ளி மற்றும் மேலப்பாளையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம், 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இருபுறமும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படாததால் இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.
இந்தப் பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், கோயம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கரூர் நகருக்குள் சென்று 20 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. பள்ளி, கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக நேரடியாக செல்ல முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் மாறி மாறி இருந்த போதிலும், பாலம் மற்றும் இணைப்புச் சாலைப் பணிகள் முழுமை பெறாததால் மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றி கழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை திறக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், “கடந்த 15 ஆண்டுகளாக பாலம் திறக்கப்படவில்லை. பள்ளி மற்றும் மருத்துவமனைக்குச் செல்ல ஆற்றுப்பாதையை பயன்படுத்தி வருகிறோம். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்” என்று மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதடங்களில் வைரலாக பரவி வருகிறது.
பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டம் எப்போது முழுமை பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் அதிகரித்துள்ளது.
