தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், காவிரி உழவர் பாதுகாப்பு சங்கம், அனைத்து விவசாயிகளின் கூட்டு இயக்கம், திருமண்டக்குடி கரும்பு விவசாயிகள் சங்கம் என பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தை முற்றிலும் புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆட்சியர் அலுவல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உரிய அழுத்தம் தர வேண்டும், மேலும் தமிழக முதல்வர் கர்நாடகம் செல்வதற்கு முன்பு விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டுவிட்டு செல்ல வேண்டும், இது அவரது தன்னிச்சையான செயலால் விவசாயிகளிடம் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்குரிய தண்ணீரை அழுத்தம் கொடுத்து பெற்று தர வேண்டும். இந்தாண்டு குறுவை சாகுபடி பொய்த்துப் போனதால் வறட்சி மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தொடர்ந்து மும்முனை மின்சாரம் தடை இன்றி வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றுக்கு 4500 வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய – மாநில கண்டன கோஷங்களை எழுப்பினர்.
