தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதால் ஆவின் பால் தட்டுப்பாடு, பொதுமக்கள் தனியார் பாலுக்கு மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சையில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். ஆவின் பால் விநியோகத்தை சுத்தமாக நிறுத்தி விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கோடை மழை பொய்த்தது மற்றும் கால்நடை தீவனங்களின் விலை உயர்வு காரணமாகத் தமிழகத்தில் ஒட்டுமொத்த பால் உற்பத்தி சமீப மாதங்களாக சரிவை சந்தித்துள்ளது. அதே போல திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலின் பெரும் பகுதி, சென்னை மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய பெரிய நகரங்களில் நிலவும் ஆவின் பால் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அங்கு அனுப்பப்படுவதாக உள்ளூர் முகவர்கள் குற்றம் சாட்ட்டி உள்ளனர்.
அதிகாலையிலேயே ஆவின் பால் தீர்ந்துவிடுவதால், வேறு வழியின்றி பொதுமக்கள் அதிக விலை கொடுத்து தனியார் பாக்கெட் பாலை வாங்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், தனியார் நிறுவனங்களும் அண்மையில் தங்களின் பால் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களுக்குக் கூடுதல் சுமையாக மாறியுள்ளது.
