தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், கடந்த 7ம் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார்.
அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.
