ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன. மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
