கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துணை மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி, கடந்த ஜூலை மாதம் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க 46 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தண்ணீர் லாரிக்கு சுமார் 2,500 ரூபாய் மட்டுமே செலவாகும் போது இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என கேள்வி எழுப்பினார்.
இந்த செலவு குறித்து மறுபரிசீலனை செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதே நிறுவனத்திற்கான ஒப்பந்தம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தண்டபாணி வலியுறுத்தினார்.
இதனிடையே, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், ராயனூர், தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் அகற்றப்பட்டு, புதிய முதலமைச்சரின் புகைப்படம் வைக்கப்பட்டு வருவதாகவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் புகைப்படங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், புதிய இடங்களில் புதிய அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தலாம் என்றும், ஏற்கனவே உள்ள திட்டங்களின் புகைப்படங்களை ஏன் அகற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும், கரூர் மாவட்டத்தில் கடந்த ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ், திட்டங்கள் நிறுத்தப்படவில்லை என்றும், திட்டங்களின் தரத்தை உயர்த்தி மறு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.
