திருத்துறைப்பூண்டி அருகே வெறிநாய்கள் அடுத்தடுத்து பொதுமக்களை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நாளில் சிறுவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் மற்றும் வெறிநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு கூத்தாநல்லூர் பகுதியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறிநாய்கள் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதுவரை போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் இன்று காலை பால்வாங்குவதற்காகவும், கரைத்தெரு பகுதிக்குச் செல்வதற்காகவும் சாலையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை திடீரென வெறிநாய்கள் துரத்திக் கடித்தன.
இந்தத் தாக்குதலில் சிறுவன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 7க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து பொதுமக்களை வெறிநாய்கள் கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்ட மனநிலையில் உள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுற்றித்திரியும் வெறிநாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், நாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
