பாபநாசம் அருகே கணபதிஅக்ரகாரம் பகுதியில் பம்பு செட்டுகளில் அடிக்கடி மின் ஒயர்கள் திருட்டு போவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள்கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கணபதிஅக்ரகாரம்,பட்டுகுடி, மணலூர், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளனர். இதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தங்கள் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந் நிலையில் இப்பகுதியில் உள்ள பம்பு செட்டுகளில் அடிக்கடி மின் ஒயர்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது.
இதனால் பெரும் பொருட்செலவு ஏற்படுவதோடு, உரிய காலத்தில் பயிர்களுக்கு தண்ணீர்

பாய்ச்ச முடியாமலும் போய் விடுகிறது. இதனால் பெரும் கலக்கம் அடைந்துள்ள விவசாயிகள் மின் ஒயர் திருடர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும் போது, கணபதி அக்ரகாரம் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறோம். இதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றோம்.இந் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மின் மோட்டார்களில் மின்சார ஒயர்கள் திருட்டு போனது. நேற்று இரவும் மின் மோட்டார் அறைகளின் பூட்டை உடைத்து விலை மதிப்பு மிக்க காப்பர் ஒயர்களையும் பியூஸ்கேரியர்களையும் திருடர்கள் திருடி சென்று விட்டனர். மேலும் பியூஸ் கேரியர்களையும் பிடுங்கி உடைத்து விட்டனர். ஏற்கனவே மின்சார தட்டுப்பாடு காரணமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச பெரும் சிரமமாக உள்ளது. இந் நிலையில் மின் ஒயர்கள் திருட்டு போனதால் மிகுந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.மின் மோட்டார்களை சீரமைக்க அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின் ஒயர் திருடர்களை பிடிக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்தனர்.
