சேலம்: மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 26 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் சென்ற அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 26 பேர் காயமடைந்தனர். மேட்டூரில் இருந்து திங்கள்கிழமை காலை ஈரோட்டிற்கு தனியார் பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்து நவபட்டி அருகே பயணிகளை ஏற்றுவதற்காக நின்றிருந்தது.
அப்போது மேட்டூரில் இருந்து 40 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. தனியார் பேருந்தை முந்த முயன்றபோது எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதாமல் செல்வதற்காக அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இடது புறமாக திருப்பினார். எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது.
காயமடைந்தவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் மட்டும் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். விபத்து காரணமாக மேட்டூர் பவானி சாலையில் சுமார் 30 நிமிட நேரம் போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மேட்டூர் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
