தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மக்கள் நலப் பேரவை ஆலோசகர் வக்கீல் வெ.ஜீவக்குமார் தலைமையில் செயலாளர் எம்.பாலகிருஷ்ணன் , நிர்வாகிகள் வக்கீல் உமர் முக்தர், பேராசிரியர் திருமேனி , ஜெயகுமார், வக்கீல் விவேக், கிருஷ்ணன் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, 1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 9 ஆம் விதியின் கீழ், 15.09.1981-ஆம் நாளன்று தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு, புது தில்லி, 11.06.1985-ஆம் நாளன்று இந்தப் பல்கலைக்கழகத்தை அங்கீகரித்தது.
தமிழ் மொழிக்கென்றே தனியொரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் எண்ணம், 1925-ஆம் ஆண்டிலேயே தமிழ்ச் சமூகத்தின் கற்றறிந்த அறிஞர்களின் மனதில் உதித்தது. இந்த எண்ணத்திற்கு, 1981 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த டாக்டர் எம்.ஜி.ஆர் தலைமையில் தான் உறுதியான வடிவம் அளிக்கப்பட்டது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில், கலை மற்றும் பண்பாட்டின் உச்சமாக தஞ்சாவூர் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருவதால், தமிழியல் துறையில் உயர்நிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவே தஞ்சாவூரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது தான் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம். கடந்த 15.09.1981-ஆம் நாளன்று தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதன் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஏறத்தாழ 1000 ஏக்கர் நிலப்பரப்பில் இது உருவாக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்தது இந்திய பாராளுமன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள நூலகமாகும். தற்சமயம் தமிழ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அதன் நிலப்பரப்பு பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படுவதற்காக ஒதுக்கப்பட்டு வருகிறது .
நூலகத்தில் குடிதண்ணீர், மின்விசிறி வசதி, மின்விளக்கு வெளிச்சம் போன்ற அடிப்படையான வசதிகள் கூட நிறைவாக இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
மேலும் மாணவர்கள், ஆய்வாளர்கள் போன்றவர்கள் நூலகத்தை பயன்படுத்தும் வசதிகள் மிகவும் குறைந்து வருகிறது.
இது தவிர நூலகத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த பணியாளர்களை விட மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே தற்போது பணியாற்றி வருவதாக தெரிய வருகிறது .
நூலகத்தில் உள்ள நூல்கள் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது.
எனவே, முடங்கி கிடக்கும் தமிழ் பல்கலைக்கழக நூலகம் முன்பு போலவே சிறப்பாக செயல்பட, புத்துயிர் ஊட்டப்பட வேண்டும். நூலகத்தில் தரம் உயர்த்தப்பட வேண்டியது அவசியமாகும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவானது
தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கும் சென்று சேரும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது.
