சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி முடித்த 122 ஆண், 36 பெண் என 158 இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவையொட்டி ஓடிஏ மைதானத்தில் மெய்சிலிர்க்க வைக்க கூடிய சாகச நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. தலைமை விருந்தினராக லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பெர்னான்டஸ் கலந்துகொண்டு இளம் ராணுவ அதிகாரிகளின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.
முன்னதாக, உடற்பயிற்சி நிகழ்ச்சியும், கேரளாவில புகழ்பெற்ற தற்காப்பு கலையான களரிப்பட்டு நிகழ்ச்சியும் இடம் பெற்றது. வால் சண்டை, கத்தி சண்டை, துப்பாக்கி சண்டை போன்ற நிகழ்ச்சிகள் தத்ரூபமாக இருந்தது. இதைத்தொடர்ந்து இருசக்கர வாகன சாகசத்தில் மனித கோபுரம் அமைத்தல், இசைகேற்ப குதிரையில் வீரர்கள் சாகசம், அணி அணியாய் இசைக்கேற்ப பிரிந்து செல்வது, அணி அணியாய் ஒன்று சேர்வது போன்ற சாகசம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. போர்களத்தில் பதுங்கு குழிகளில் அமர்ந்து எதிரிகள் மீது குண்டு வீசியும், எதிரிகளின் தளவாடங்களை அழித்தும், எதிரிகளை துவம்சம் செய்வது வெற்றி முழக்கமிடுவதும் மெய்சிலிர்க்க வைத்தது. எங்கு பார்த்தாலும் பிணங்களும், வெடி சத்தமும், புகை மண்டலமும் போர்க்களம்போல் காணப்பட்டது.
நிகழ்ச்சியின்போது பார்வையாளர்கள் உணர்ச்சிவப்பட்டனர். நிகழ்ச்சியில் சிறப்பாக சாகசங்கள் புரிந்த அணிகளுக்கு ராணுவ பயிற்சி மைய தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பெர்னாண்டஸ் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், ராணுவ அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் உறவினர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
