Skip to content
Home » ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘முகாம் தொடங்கியது….. கிராமங்களில் கலெக்டர்கள் ஆய்வு

  • by Senthil

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கத்தோடு, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23ம் தேதி அறிவித்தார். இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தது.உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்  சென்னை மாவட்டம் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட வட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை அன்று கலெக்டர்கள் தலைமையில் நடைபெறும்.

இன்று தொடங்கும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் ஏதாவது ஒரு கிராமத்தை தேர்வு செய்து நேரடியாக அந்த கிராமத்துக்கு சென்று 24 மணி நேரம் அங்கு தங்கி மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை தீர்த்து வைப்பார்கள்.

இந்த திட்டத்தின்படி கலெக்டர்கள் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை கிராமத்தில் தங்கியிருப்பர். அந்த கிராமத்தில் தங்கி இருந்து பல்வேறு அரசு துறைகளின் மூலம்

செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் கலெக்டர்கள் மேம்பட்ட சேவைகள் வழங்குதல், திட்டங்களை விரைவுபடுத்துதல் தொடர்பாக உரிய தீர்வு காண உள்ளனர். மேலும், கலெக்டர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி இன்று காலை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் காலையில் துறையூர்  தாலுகா கண்ணனூர் புறப்பட்டு சென்றார். அங்கு  ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிரடி  ஆய்வு நடத்தினார்.  துறையூரில் இன்று இரவு தங்கி  கள ஆய்வு நடத்துகிறார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா  பொன்னமராவதி வட்டம்,

ஆலவயல் கிராமத்தில், “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாமில் பங்கேற்று உள்ளார்.   வழியில் அவர் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார்.  ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்துள்ளார்களா என தலைமை ஆசிரியையிடம் விசாரித்தார். மற்றும் பள்ளியில் எத்தனை பேர் படிக்கிறார்கள்,   அடிப்படைத்தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். பின்னர் அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கும் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகளுடன் சிறிது நேரம் அவர்  உரையாடினார்.

இதுபோல நாகை கலெக்டர்  டாம்  வர்கீஸ் திருக்குவளையில்  இன்று மக்களை சந்தித்து முகாமை தொடங்கினார்.  பெரம்பலூர் கலெக்டர்  கற்பகம்  வேப்பந்தட்டைக்கு சென்றார் . அங்கு  வட்டாட்சியர் அலுவலகத்தில்  ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் சு.கோகுல் மற்றும் பலர்  கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் மக்களை நேரடியாக சந்தித்து பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!